பரமக்குடி அங்காளம்மன் கோயில் 23ம் ஆண்டு பால்குட விழா
பரமக்குடி: பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பண சுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி, பாரிவேட்டை மற்றும் 23 ம் ஆண்டு பால்குட விழா நடந்தது. அப்போது பால்குடம் எடுத்த பெண்கள் சக்தி கோஷம் முழங்க சென்றனர்.
இக்கோயிலில் பிப்., 16 இரவு 7:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பிப்., 17 காலை 9:00 மணிக்கு மேல் கொடி மரத்தில் சிங்க கொடி ஏற்றப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பிப்., 20 காலை பாரிவேட்டை விழாவும், இரவு அங்காளம்மன் அன்ன வாகனத்தில் வீதி வலம் வந்தார். நேற்று காலை 8:00 மணி முதல் பக்தர்கள் கோயிலில் இருந்து பால் குடங்களை எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு அம்பாளுக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காளர் ஜீவானந்தம் செய்திருந்தார்.