பழநியில் கார்த்திகை சிறப்பு வழிபாடு : காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
பழநி: பழநி கோவிலுக்கு விடுமுறை நாள், மாத கார்த்திகை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் முருக பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்தது.
பழநி கோயிலுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்திலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில முருக பக்தர்கள் வருகையும் அதிக அளவில் வருகை புரிந்தனர். பழநி மலைக்கோயிலில் மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. திருவிளக்கு பூஜை மலைக்கோயிலில் நடைபெற்றது. அதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.
பழநி அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, ஜவஹர் வீதி, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தி இருந்தனர். அடிவாரம், ஜவஹர் ரோடு, கிரிவிதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி, தேவஸ்தான விடுதிகளில் அனைத்து அறைகளும் நிரம்பின. பக்தர்கள் அறை கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். வி.ஐ.பி., தரிசன டிக்கெட் வழங்குவது சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மலைக்கோயிலில் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரோப் கார், வின்ச் பகுதிகளில் முன்னுரிமை கேட்டு பலர் வந்ததால் அதிகாரிகள் சிரமம் அடைந்தனர். பழநி, கிரிவீதியில் சாலையோரம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால் பக்தர்கள் அதிக சிரமம் அடைந்து வருகின்றனர்.