வடகரை காளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
சிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரம் வடகரை காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள வடகரை காளியம்மன் கோயில் மாசி திருவிழா காப்புக் கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முதல் நாள் பால்க்குடம், சந்தனக் குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் விழா நடைபெற்றது. இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு வடகரை காளியம்மன் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று சோழபுரம் கிராமப் பொதுமக்கள், கோயில் குலதெய்வ பாத்தியதாரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி வழிபட்டனர். இவ்விழாவில், சிவகங்கை, சோழபுரம், மதகுபட்டி, ஒக்கூர் ஆகிய கிராமங்களிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.