கோவில் அன்னதான திட்டத்தில் பின்னடைவு
அன்னதான திட்ட நன்கொடை உயர்வால், அன்னதான திட்டத்தில் பின்னடைவு ஏற்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், 38,421 கோவில்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியாற, 2006ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, அன்னதானத்திட்டம் கொண்டு வரப்பட்டது. நன்கொடையாளர்களிடம் இருந்தும், கோவில் உண்டியல் வசூல் மூலமும், கணிசமான தொகை பெறப்பட்டு, அதன் மூலம் அன்னதானத் திட்டம் நடந்தது. பல கோவில்களில் நன்கொடையாளர்களும், போதிய உண்டியல் வசூலும் இல்லாமல், அன்னதானத் திட்டத்தை தொடர முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். கடும் விலைவாசி உயர்வால், அன்னதான திட்ட நன்கொடையை, 2,000 ரூபாயாகவும், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு நாளில் அன்னதானம் அளிக்க, முதலீடு தொகையை, 20 ஆயிரம் ரூபாயாகவும், அரசு உயர்த்தியது. இது, கோவில் அதிகாரிகளை, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் காரணமாக, நன்கொடையாளர்கள் வெகுவாக குறைந்து விட்டனர்.
அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அன்னதானத் திட்டத்துக்காக, நன்கொடையாளர்களிடம் இருந்து, 1,400 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மேலும், 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், ஆண்டுதோறும், ஏதேனும் ஒரு நாளில் நன்கொடையாளர்கள் விரும்பும் தினத்தில், அவர்களது பெயரில் அன்னதானம் வழங்கப்பட்டது. விலைவாசி உயர்வால், இத்தொகையை உயர்த்தி, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டனர். நன்கொடை உயர்த்தப்பட்டதால், நன்கொடையாளர்கள் குறைந்து வருகின்றனர். அன்னதானத் திட்ட நன்கொடை உயர்வு குறித்து, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.