அலகு குத்தி பக்தர்கள் ஜாத்திரை விழாவில் நேர்த்திக்கடன்
திருத்தணி: பக்தர்கள் அலகு குத்திய நிலையில், டிராக்டரை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்தும், அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர் பேட்டை, ஆர்.கே.,பேட்டை ஆகிய பகுதிகளில், ஜாத்திரை திருவிழா துவங்கியது. பள்ளிப்பட்டு தாலுகாவில், பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, ராஜா நகர், அம்மையார்குப்பம், வங்கனூர், ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணாகுப்பம், சொரக்காய்பேட்டை உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜாத்திரை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.அந்தந்தப் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூங்கரகத்துடன் திருவீதியுலா நடந்தது.அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே., பேட்டை ஆகிய பகுதிகளில், ஐந்து பக்தர்கள் அலகு குத்தியபடி டிராக்டரை இழுத்து வந்தனர். அலகு குத்தி, அந்தரத்தில் தொங்கிய நிலையில் ஊர்வலமாக சென்று, அம்மன் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.