உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் மாசி திருவிழாவில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா: நாளை தேரோட்டம்

திருச்செந்தூர் மாசி திருவிழாவில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா: நாளை தேரோட்டம்

தூத்துக்குடி :துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா எழுந்தருளினார்.
இக்கோயிலில் மாசி திருவிழா பிப்., 25 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 8ம் நாள் விழாவில் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து வெண்மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்திக் கோலத்தில் வீதி உலா வந்து சிவன் கோயிலை அடைந்தார். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மதியம் 1:10 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சைப்பட்டு சாத்தி மரிக்கொழுந்து மணம் கமல பச்சை கடசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்திக்கோலத்தில் வீதி உலா வந்தார். இன்று(மார்ச் 5) இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும் தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா வருவர். நாளை (மார்ச் 6) காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 7 இரவு சுவாமி தெப்ப உற்ஸவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை கமிஷனர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !