திருக்கோளூர் கோயிலில் குபேரனுக்கு பெருமாள் நிதி கொடுத்த தினம்
ஆழ்வார்திருநகரி: திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் குபேரனுக்கு பெருமாள் நிதி கொடுத்த தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நவ திருப்பதி ஸ்தலங்களில் 8வது திருத்தலமாக விளங்குவது திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டு முழுதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்த பூச தினத்தை இங்கு சிறப்பாக கொண்டாடுகின்றனர். பணத்தை பக்தர்கள் பெருமாளின் தலைப்பகுதியில் மரக்காலில் வைத்து வணங்கி பெற்றுச் செல்கின்றனர். அதனை அவர்கள் வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதற்காக நேற்று மூலவருக்கு சிறப்பு பூச்சட்டை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத த்தமாநிதி பெருமாள் மற்றும் தாயார் குமுதவல்லி, கோளுர் வள்ளி தேவியருடன் சுவாமி மதுரகவி ஆழ்வார் குலசேகரஆழ்வார் உடன் பூப்பந்தல் கீழ் சிறப்பு அலங்காரத்தில் மகா மண்டபத்தில் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சயன கோலத்தில் இருக்கும் வைத்தமாநிதி பெருமாளையும் தாயாருடன் அருள்பாலிக்கும் உற்சவ மூர்த்தியையும் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.