கோட்டை அரங்கநாதர் கோவில் புரட்டாசி விசேஷத்துக்கு தயார்
ஈரோடு: புரட்டாசி பிறப்பை முன்னிட்டு, ஈரோடு கோட்டை அரங்கநாதர் கோவிலில் விசேஷத்துக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
புரட்டாசி மாதத்தில் பெருமாள், வராக அவதாரத்தில், இரண்யனை அழித்ததால், அம்மாதத்தை பெருமாளுக்கு உகந்ததாக கொண்டாடுகின்றனர். புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்த்து, விரதம் கடைபிடித்து, பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் நன்மை பிறக்கும் என்பது ஐதீகம்.பொதுவாக அனைத்து சனிக்கிழமையுமே பெருமாளுக்கு உகந்த கிழமை. ஆனால், புரட்டாசியில் அரக்கனை அழித்து உயிர்களை காத்ததால், புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் விசேஷமாக இருக்கும். புரட்டாசி மாதத்தில், சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவில்கள், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.இந்த ஆண்டு புரட்டாசி மாதம், செப்டம்பர் 17ம் தேதி பிறக்கிறது. இதனையொட்டி, ஈரோடு கோட்டை அரங்கநாதர் கோவிலில் உள்ள சிலைகள், பிரபாவளி, குத்துவிளக்கு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து கோவில் ஊழியர்கள் கூறியதாவது:ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிறக்கையில், பிரபாவளி, சிலைகள், குத்துவிளக்குகள், பீடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு வரும் 17ம் தேதி, புரட்டாசி மாதம் பிறப்பதால், மகாலட்சுமி, ஆண்டாள், வரதராஜ பெருமாள் உள்பட அனைத்து சிலைகள், குத்துவிளக்குகள், பீடங்களை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விரைவில், கோவில் வளாகத்துக்குள் மேற்கூரைகள், பந்தல் அமைக்கப்படும். அதேபோல், புரட்டாசி சனிக்கிழமை தோறும் வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.