ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா
ஏரல் : ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 11ம் தேதி நடந்தது. அன்று காலை தாமிரபரணி நதியிலிருந்து பால்குடம் எடுத்து மேளவாத்தியங்களுடன் நகர்வீதி வலம் வருதல், மதியம் மகா அபிஷேகம், மஞ்சள் நீராடுதல் மற்றும் மதிய தீபாராதனை, மாலை 3 மணிக்கு அம்மன் கேடயச் சப்பரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலை தாமிரபரணி நதியிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து வருதல், இரவு சிங்காரி மேளம், செண்டை மேளம் தொடர்ந்து கரகாட்டம் நடந்தது. இரவு புஷ்ப அலங்கார தீபாராதனை, பிரம்மசக்தி அம்மன் கோயிலிலிருந்து அம்மன் கேடயச் சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதலும் அம்மன் புறப்பாடு நடந்தது. இரவு அம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் ஏரல் நகர்வீதி வலம் வரும் முக்கிய நிகழ்ச்சியும் நடந்தது. கொடை விழாவில் சென்னை, கோவை, ஏரல் சுற்றுவட்டார மக்கள் மற்றும் பஜார் வியாபாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். அம்மனுக்கு தீப ஆராதனை நடந்தது. இன்று இரவு 9 மணிக்கு சென்னைவாழ் சவுக்கை முத்தாரம்மன் உறவின் முறை நாடார் சங்கம் சார்பில் திரை இசைத் திருவிழா நடக்கிறது. நாளை வழக்காடு மன்றம் 15ம் தேதி சிந்தனைப்பட்டிமன்றம், 16ம் தேதி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.