திருப்பரங்குன்றம் கோயில் யானை அவ்வைக்கு ரூ. 49.50 லட்சத்தில் மணிமண்டபம்
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2012ம் ஆண்டு இறந்த யானை அவ்வைக்கு ரூ. 49.50 லட்சத்தில் மணிமண்டபம் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1971ம் ஆண்டு 12வயதில் யானை கொண்டு வரப்பட்டது. அந்த யானைக்கு அவ்வை என பெயரிடப்பட்டு கோயிலில் வளர்க்கப்பட்டது. 40 ஆண்டுகள் சுவாமி புறப்பாடு, திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சியில் 2012ம் ஆண்டு வரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்ந்தது. 2012ல் வயது முதிர்வு, நோயால் யானை அவ்வை இறந்தது. யானை அவ்வையின் உடல் மலைக்கு பின்புறம் உள்ள பசு மடத்தின் ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது ரூ. 49.50 லட்சத்தில் யானை அவ்வைக்கு மணிமண்டபம் கட்ட கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. துணை கமிஷனர் சுரேஷ்: ரூ. 30.67 லட்சத்தில் மணிமண்டபமும், ரூ. 18 லட்சத்தில் யானையின் சிலை மற்ற பணிகளும் நடைபெற உள்ளது. தற்போது இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் என்றார்.