ராமர் கோவிலில் ராமநவமி விழா ஸ்ரீராமரும் ஆஞ்சநேயரும் திருவீதி உலா
கோவை:ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், நேற்று ஸ்ரீராமநவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ ராமர் சந்நிதியில் மூலவர் சீதாராமருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தன. காலை 8:00 மணிக்கு, ஸ்ரீ மத் ராமாயணம் மூல பாராயணம், பட்டாபிஷேகம் நடந்தது.
8:30 மணிக்கு மஹா தீபாராதனையும், 9:15 மணிக்கு கோவை டிவோசனல் குழுவினரின் ராமர் பஜனையும், 10:00 மணிக்கு நாமபஜன் மண்டலி மகளிர் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு கலைவாணி குழுவினரின் ராமநாம ஸ்மரண நிகழ்ச்சியும், 6:30 மணி முதல் 8:00 மணி வரை நாட்டிய நிகேதன் நடனப்பள்ளி மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.மாலை 6:30 மணிக்கு, ஸ்ரீராமர் மற்றும் ஆஞ்சநேயர் திருவீதி உலா புறப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்து பகவானின் அருளை பெற்றனர்.
கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான தலைவர் நாகசுப்ரமணியம் கூறுகையில், ராமநவமி மிக சிறப்பான நாள். இந்த பாரத தேசத்தில் ஸ்ரீராமர் அவதரித்த நாள். இந்த நாளில் ராமரை தரிசனம் செய்து வழிபாட்டால், வாழும் காலம் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம். ஸ்ரீராமரும், ஆஞ்சநேயரும் சேர்ந்து வீதி உலா வரும் காட்சியை, பக்தர்கள் தரிசனம் செய்தால், சகல கஷ்டங்களும் நீங்கி சுபிக் ஷம் பெறலாம், என்றார்.