வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழா கோலாகலம்
சென்னை,சென்னை, வடபழநியில் ஆண்டவர் கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, 1ம் தேதி லட்சார்ச்சனை துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த லட்சார்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
பங்குனி உத்திரமான நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. பின், யாகசாலையில் பூர்ணாஹுதி பூர்த்தியானது. நண்பகல் மூலவருக்கு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் நடந்தது. இரவு, வடபழநி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, இன்று முதல், 7ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. இன்று தெப்பத்தில் வடபழநி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. கோடை வெயில் அதிகம் காணப்பட்டதால் பக்தர்கள் வசதிக்காக நேற்று கோவில் முகப்பில், லாரி வாயிலாக தண்ணீர் தெளித்து சாலை குளிர்விக்கப்பட்டது. கோவில் வளாகத்திலும், ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
போரூர் பாலமுருகன் கோவில்: போரூர் ஈஸ்வரன் கோவில் தெருவில், பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று, பக்தர்கள் பால் குடங்களுடன், போரூர் -- குன்றத்துார் சாலையில் ஊர்வலமாக நடந்து சென்றனர். வாய், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தபடியும், பக்தர்கள் கோவில் வளாகத்திற்கு வந்தனர். அந்த பால்குடங்களை வாங்கி, முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, கோவில் வளாகத்தில் தொடர் அன்னதான திட்டத்தை துவக்கினார். பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.