ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரவிழா கோலாகலம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி விழாவில் பக்தர்கள் "அரோகரா கோஷத்துடன் பால்குடம், காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மூலவர் முருகன் வள்ளி தெய்வானை உடன் ராஜா அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழா இன்று நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் நொச்சிவயல் ஊரணியில் தீர்த்தமாடி பால்குடம், பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் ஏந்தியும் கன்னத்தில் 2 அடி முதல் 12 அடி வரையிலான அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும் அரண்மனை, வண்டிக்கார தெரு வழியாக "அரோகரா கோஷத்துடன் ஊர்வலமாக சென்று வழிவிடு முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்களுக்கு அரண்மனை பகுதியில் சாம்பிராணி போட்டு இஸ்லாமியர்கள் வரவேற்றனர். மூலவர் முருகன் வள்ளி தெய்வானை உடன் ராஜா அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.