ஊத்துக்கோட்டை அருகே அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு
சென்னை: ஊத்துக்கோட்டை அருகே, அரிகண்டம் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சிப்காட் பகுதியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வு மாணவர்களான சரண்ராஜ், மதியழகன், ஊத்துக்கோட்டை ராஜேஷ் ஆகியோர், பழமையான பலகை சிற்பம் உள்ளதை கண்டறிந்தனர். தொல்லியல் ஆய்வாளர் சங்க தலை வர் மணியன் கலியமூர்த்தி குழுவினர் கள ஆய்வு செய்தபோது, வேப்ப மரத்தடியில் 3 அடி அகலம், 2 அடி உயரத்தில் பலகைக் கல்லால் ஆன சிற்பம் இருப்பதை அறிந்தனர். அதில், ஒரு வீரன் தன் இடது கையில் தன் குடுமியை பிடித்துக்கொண்டு, வலது கையில் உள்ள வாளால் அரிவது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளதை கண்டறிந்தனர்.
அந்த வீரனின் கைகளில் சாதாரண காப்பு, வேலைபாடு இல்லாத கழு த்தணி இருந்தது. அதன் கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது. இதுகுறித்து, மணியன் கலியமூர்த்தி கூறியதாதவது: இந்த சிற்பம், 11– 12ம் நுாற்றாண்டு, சோழர் காலத்தை சேர்ந்ததாக உள்ளது. இதில் உள்ள வீரர், தன்பலி எனும் அரிகண்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது, மன்னன் அல்லது தலைவன் போரில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவோ, ஊர் வளம் பெற வேண்டும் என்பதற்காகவோ, கொற்றவையின் முன் தன் தலையை வெட்டி பலியிடுவர். இவ்வாறான செயலில் ஈடுபடுவோரின் குடும்பத்துக்கு, ஊர் சபையினர், உதிரக்காணி என்ற பெயரில் நிலங்களை தானமாக வழங்குவர். இந்த சிற்பத்தை, உள்ளூர் மக்கள், எல்லைக் கல் கருப்புசாமியாக வணங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறி னார்.