வீரட்டானேஸ்வரர் கோவில் சீரமைப்பு பணி மும்முரம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் தூய்மைப்படுத்தி சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகளை கடந்து விட்டது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். கோவிலில் பழுதடைந்த பல பகுதிகளை சீரமைத்து குடமுழக்கு விழா நடத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இச்சூழலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அப்போதைய துறை செயலாளர் குமரகுருபரன் ஏற்பாட்டில், அமைச்சர் சேகர்பாபு ஆணையின்படி திருப்பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேரின் மேல் கோப்புகள் ரூ. 37.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேலும் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, ராஜகோபுரங்கள், யாகசாலை மற்றும் மடபள்ளி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள ரூ. 2.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கோவிலின் சுற்றுச்சுவரில் உள்ள சுண்ணாம்பு பூச்சிகள் தண்ணீர் பிச்சை அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவடைந்தவுடன் சுற்று சுவர் இணைப்புகளில் இருக்கும் பழுதுகள் சிமெண்ட் கலவை கொண்டு சீரமைக்கப்பட உள்ளது. அதேபோல் கோவிலின் மேல் தளம் பழுதடைந்து தண்ணீர் ஒழுகுவதால் மேல் தளத்தில் உள்ள சுண்ணாம்பு பூச்சிகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் முழு வேகத்துடன் நடந்து வருகிறது.