உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விசு கனி தரிசனம்: பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கல்

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விசு கனி தரிசனம்: பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கல்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை தமிழ் மாத வருடப்பிறப்பை முன்னிட்டு விசு கனி தரிசன விழா நடந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலிலும் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். நேற்று அதிகாலை 4:30 மணியளவில் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா சங்கரன், சங்கரி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அஷ்டாபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள பஜனை மண்டபத்தில் உற்ஸவர் ஐயப்பனின் முன்பு முகக்கண்ணாடி வைக்கப்பட்டு மா, பலா, வாழை, திராட்சை, பேரிச்சை மற்றும் அனைத்து வகையான காய்கறிகள் உள்ளிட்டவைகள் 108 தட்டுகளில் குவியிலாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அதிகாலை முதல் மாலை வரை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் தலைமை குருசாமி மோகன் வெற்றிலை, பாக்கு, பழம், ஒரு ரூ. நாணயம் ஆகிவற்றை கை நீட்ட பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கினார்.

மூன்று வேளையும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர். தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி பக்தர்களின் சபரிமலை யாத்திரை புறப்பாடு நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !