கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. கோயிலில் மூலவர் கதலி நரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் அருள் பாலிக்கிறார். செங்கமலத் தாயார், கிருஷ்ணன், துர்க்கை, விநாயகர், சக்கரத்தாழ்வார், அனுமன் மற்றும் நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் 10 நாள் விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து இன்று நடந்த கொடியேற்று விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. சிறப்பு பூஜைகளுக்கு பின் பெருமாளுக்கு கங்கணம் கட்டு நிகழ்ச்சி அதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வார் கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் கோயில் கொடியேற்றப்பட்டது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். மே 1 ல் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், மே 4, 5 தேதியில் தேரோட்டமும் நடைபெறும்.