உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1000 ஆண்டுகள் பழமையான மஹிஷாசுரமர்த்தினி சிலை கண்டெடுப்பு

1000 ஆண்டுகள் பழமையான மஹிஷாசுரமர்த்தினி சிலை கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்ரை அருகே, 1,000 ஆண்டுகள் பழமையான, மஹிஷாசுரமர்த்தினி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, பாம்பாற்றங் கரையோரம் முத்தாகவுண்டனுார் கிராமத்தில், மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள இடிந்த சிவன் கோவில் அருகே இருந்த சிலைகள் பற்றி, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த இடத்தில் எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்த கங்கர்கள் காலத்திய வட்டெழுத்து நடுகற்கள் இரண்டு காணப்படுவது மற்றும் இங்கு கிடைத்த மஹிஷாசுரமர்த்தினி சிலைகளின் அமைப்பை ஆராய்ந்தபோது, 1,000 ஆண்டு பழமையானவை என தெரிகிறது. சிலையின் பின் கைகளில் சங்கு, சக்கரத்தை பிடித்தவாறும், முன் கைகளில் சூலம் கொண்டு, எருமை உடல் கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள நேராக நிற்கும் விஷ்ணு துர்க்கை சிலையின் பின் கைகளில் சங்கு, சக்கரமும், முன் வலது கை அபய முத்திரையில் இருக்க, இடது கை தொங்கவிட்டும் உள்ளது. அடுத்தது பிரம்மசாஸ்தா உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ளார். மாவட்டத்தில் இதுவரை சாஸ்தா என்னும் அய்யனார் சிலை கிடைத்ததில்லை. இதுவே முதன் முறை, இந்த இடத்தில் ஒரு முழுமையான சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். அந்த கோவிலின் சிலைகள் தான் இவை. அதேபோல் வட்ட வடிவ ஆவுடையார், சதுர ஆவுடையார், உடைந்த நந்தி ஆகியனவும் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வில், தலைவர் நாராயணமூர்த்தி, சதாநந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !