மதுரை சித்திரை தேரோட்டம் ; பக்தர்கள் அலையில் அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்
மதுரை: மதுரையில் நேற்று நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று (மே 3) தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. அதிகாலை 5:05 மணி முதல் 5:45 மணிக்குள் அம்மனும், சுவாமியும் தேரில் எழுந்தருள தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாசி வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தை காண்பதற்கு சுற்றுப்பகுதி கிராமமக்கள் மற்றும் மதுரை மக்கள் திரளாக கூடியிருந்தனர். லட்சக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வழக்கு நம் மண்ணில் காலம் காலமாக வழங்கி வருகிறது. சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடைபெறும். ஒற்றுமையை வலியுறுத்தும் இவ்விழா நம் பண்பாட்டுக் கலைகளின் அடையாளமாகத் திகழ்கிறது. நாட்டை ஆளும் மன்னன் நகரை வலம் வருவது போல, இவ்வுலகையே ஆளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர்பவனி நடைபெற்று வந்ததை திருப்பணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது. 16ம் நூற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தைக் கட்டியுள்ளார். இப்போது பவனி வரும் தேர்கள் இரண்டும் ராணிமங்கம்மாளின் பேரனான விஜயரெங்கசொக்கநாத நாயக்கரால் (1706-1732) செய்யப்பட்டவை. இரண்டு தேர்களிலும் சிவபுராணம், திருவிளையாடல் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. சுவாமியும், அம்மனும் தேரில் பவனி வரும் போது ஆபரணம் ஏதும் அணிவதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டியி ருப்பர். தேர் பவனி முடிந்த பின் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சியம்மனுக்கும் கிரீடம், ஆபரணங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
காலையில் தேரில் பவனி வரும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் இரவில் சப்தாவர்ண சப்பரத்தில் பவனி வருவர். ருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தி வந்தனர். சிவபெருமான் தேரேறிப் புறப்பட்டு அவர்களை வதம் செய்து உலகைக் காத்து அருளினார். இப்புராண நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மாசிவீதிகளில் பவனி வருகின்றனர். 12ம் திருவிழா அன்று ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் பவனி வருவர். மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. , மே 4 கள்ளழகர் எதிர்சேவை, மே 5ல் வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.