மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா தசாவதார நிகழ்ச்சி
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சியில் வீர அழகர் பல்வேறு வேடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோவில் வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.இந்நிலையில் விழாவின் முத்திரை பதிக்கும் சிகர நிகழ்ச்சியான வைகையாற்றில் வீர அழகர் இறங்கும் விழா இன்று காலை 7:45 மணிக்கு நடைபெற்றது.இதில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தசாவதாரம் நிகழ்ச்சிக்காக வீர அழகர் நேற்று காலை கோர்ட்டார் மண்டகப்படியில் எழுந்தருளினார்.மாலை முதல் வீர அழகர் கிருஷ்ணன்,ராமர் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதனைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா வந்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன் அர்ச்சகர் கோபி மாதவன் செய்திருந்தனர்.