மாரியம்மன், ஜெயமாரியம்மன் கோவில்களில் திருவிழா
போத்தனூர்; சுந்தராபுரம் அருகேயுள்ள சாரதா மில் லைன் மாரியம்மன் கோவிலின், 75 வது ஆண்டு திருவிழா கடந்த, 2ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மறுநாள் முதல் காமாட்சி, சமயபுரம் மாரியம்மன், வராஹி, மகாலட்சுமி, பத்ரகாளி உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மன்.பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். இன்று காலை அபிஷேக பூஜைக்கு பின் மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை காலை பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரக ஊர்வலம் துவங்கி, கோவிலை வந்தடைகிறது. மாலை மாவிளக்கு பூஜை நடக்கிறது. 11 மாலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு மகா அபிஷேக பூஜையும் நடக்கின்றன.
மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜர் நகரிலுள்ள ஜெயமாரியம்மன் கோவிலின் இரண்டாமாண்டு சித்திரை திருவிழா கடந்த, 30ல் எல்லை கட்டுதலுடன் துவங்கியது. 2ல் கம்பம் நடப்பட்டது. மறுநாள் முதல் கம்பம் சுற்றி விளையாடுதல் நடந்தது. நேற்று முன்தினம் திருவிளக்கு வழிபாடு நடந்தது. இன்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரக ஊர்வலம் துவங்கி கோவிலை வந்தடைகிறது. மதியம் சிறப்பு பூஜை, அன்னதானமும் மாலை மாவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன. 11 காலை அம்மன் வீதி உலாவுடன் மஞ்சள் நீராடல் நடக்கிறது. 12 இரவு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.