பரமக்குடி அழகர் பூ பல்லக்கில் வீதிவலம்; விடிய விடிய தரிசனம்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று பால் மற்றும் சந்தனக்குடம் எடுக்கும் விழாவில், அழகர் பூ பல்லக்கில் விடிய விடிய வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவில், மே 10 உற்சவ சாந்தி, இரவு பெருமாளுக்கு கசாயம் நெய்வேத்தியம் செய்யப்பட்டது. இக்கோயிலில் தொடர்ந்து நேற்று காலை 10:00 வாணியர் சபை சார்பில் பக்தர்கள் பால்குடம் மற்றும் சந்தனக்குடம் எடுத்து வந்தனர். காலை 11:00 மணி தொடங்கி சுந்தரராஜ பெருமாள் மற்றும் காவல் தெய்வம் கருப்பணசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு அழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி, ஈட்டி ஏந்தி பூ பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் இரவு 9:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி, பல்வேறு திருக்கண் மண்டகப்படிகளில் தீபாராதனைகள் நடந்தன. பெருமாள் இரவு முழுவதும் நகர் வலம் வந்து இன்று காலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.