உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் 16ம் நுாற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு

மதுரையில் 16ம் நுாற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு

மதுரை : மதுரை சோழவந்தான் அயன் குருவித்துறை அருகே தொல்தமிழ் மெய்யியல் ஆய்வாளர் ஹாருன் பாஷா ஆய்வு நடத்தியபோது 6 சதிக்கற்களை கண்டுபிடித்துள்ளார். கணவன் இறந்த பின் அவரை எரியூட்டும் சிதையிலே விழுந்து மனைவி இறக்கும் முறையே சதிக்கல். இம்முறை நாயக்கர் ஆட்சியில் தலைத்துாக்கி இருந்தது. நான்கு இரண்டடுக்கு, இரண்டு ஓரடுக்கு என 6 கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதல் கல் 3 அடி உயரம் 1 அடி அகலம் கொண்டது. அதில் கீழடுக்கு கணவன் மனைவியும், மேல் அடுக்கு மேல்நோக்கிய கத்தியும் கதையும் கொண்ட 2 பெண்களை உடையது. இரண்டாவது கல் 4 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்டது. போரில் பரியேறி இறந்துவிட்டான் என்ற வகையில் இருக்கும் 2 அடுக்கு சதிக்கல். கீழே உள்ள குதிரை வீரன் சிற்பம் போரில் மாய்ந்ததையும், மேலே உள்ள மனைவியர் சிலை அவர்கள் தீப்பாய்ந்ததையும் குறிக்கிறது. மூன்றாவது சதிக்கல் 3.5 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டது. இதிலும் கீழடுக்கு போரில் இறந்தவனையும், மேல் அடுக்கில் உள்ள பெண்களில் ஒருவர் இடது கையில் தீப்பந்தம் ஏந்தி உள்ளார். இது அவர் உடன்கட்டை ஏறியதை குறிக்கிறது.நான்காவது சதிக்கல் 3.5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்டது. 2 மனைவியருடன் கூடிய 2 அடுக்கு சதிக்கல். கீழ் அடுக்கில் ஒரு ஆண், ஒரு மனைவி குழந்தையுடனும், மற்றொருவர் கையில் ஒரு கலனுடனும் இருக்கிறார். மேல் அடுக்கில் மூவரும் அமர்ந்த கோலமாய் இருப்பது அவர்கள் தீபாய்ந்து மேல் உலகம் சென்றதைக் குறிக்கிறது. இவர் களத்தில் இறந்தார் என்பதை குறிக்க 3 வது அடுக்காக குதிரை வீரன் சிலை உள்ளது. அயன் குருவித்துறையிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் 2 சதிக்கற்கள் உள்ளன. இவை ஒரு அடுக்கு கல் ஆகும். உடன்கட்டை ஏறியதைக் குறிப்பதற்காக கையில் உள்ள கத்தி மேல் நோக்கி உள்ளது. இக்கற்கள் 16 ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. இவற்றில் எழுத்துகள் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !