விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.வைகாசி பவுர்ணமி வளர்பிறையில் நடக்கும் வெயிலுகந்தம்மன் கோயிலின் வைகாசி பொங்கல் விழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டு மே 23ல் சாற்றுதல் நடந்து கொடியேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் அம்மன் ரிஷபம், வெள்ளி வாகனங்களில் வீதி உலா வந்தார். பக்தர்கள் வழிபட்டனர். முக்கிய நிகழ்வான வைகாசி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. காலை முதலே பக்தர்கள் கோயில் முன்பகுதியில் பொங்கலிட்டனர். வெயிலுகந்தம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் கயிறு குத்து, அக்னிசட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. காலை முதல் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நாளை ஜூன் 1ல் தேரோட்டமும் நடக்கிறது.