உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராணிப்பேட்டை காளத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ; பக்தர்கள் வழிபாடு

ராணிப்பேட்டை காளத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ; பக்தர்கள் வழிபாடு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த பனப்பாக்கத்திலுள்ள ஞானாம்பிகை உடனறை காளத்தீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

கி.பி., 18ம் நுாற்றாண்டில், ராமேஸ்வரத்தை சேர்ந்த, சிவ பக்தர்களான, வேதியர் சொருபகரன் – சுசிலை தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாமல், சிவபெருமானை நினைத்து வழிபட்டு வந்தனர். அப்போது, அகண்டானந்தா முனிவர், அந்த தம்பதியிடம், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியன்று காளஹஸ்தியில் உள்ள காளத்தீஸ்வரரை தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டுமென கூறினார்.  இதனால், தம்பதியினர், ஆண்டுதோறும் ராமேஸ்வரத்திலிருந்து காளஹஸ்திக்கு பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில், சுசிலை கர்ப்பமடைகிறார். அப்போது, நிறைமாத கர்ப்பிணியான காலத்தில்,  காளஹஸ்திக்கு யாத்திரை செல்லும் வழியில்,  ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் கிராமத்தை வந்தடைந்தபோது, ஆண் குழந்தை பிறக்கிறது. அப்போது, காளத்தீஸ்வரரை தரிசனம் செய்ய முடியாமல், மனம் வருந்துகின்றனர்.  அப்போது, வேதியர் சொருபகரன், சுசிலை தம்பதிக்கு ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரர் அங்கு காட்சி அளித்தார். இதையடுத்து, அக்கிராமத்தில், 1875ம் ஆண்டு  ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரருக்கு கோவில் கட்டப்பட்டு, கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். அக்கோவிலை, அக்கிராமத்தை சேர்ந்த சாந்தா குடும்ப வழியை சேர்ந்த முத்துமுனிய முதலியார் குடும்பத்தார் கடந்த, 1885ம் ஆண்டு முதல் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.

கடந்த, 1990ல் இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று ஓய்வுபெற்ற நீதிபதியும்,  தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய தலைவருமான சுதாகர் மற்றும் பரம்பரை அறங்காவலர் சேகர் முதலியார் ஏற்பாட்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு, 13 யாக சாலை குண்டம் அமைக்கப்பட்டு, கடந்த 5ல், கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, தொடர்ந்து கருவறை விமானத்தில் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலச புனித நீரை ஊற்றி  மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, அரோகரா என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.  கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருமுறை இன்னிசை, ஆன்மிக பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், திருக்கல்யாணம்  மற்றும் இரவு சுவாமி வீதி உலா நடந்தது. விழாவில் பனப்பாக்கம் பாஸ்கர் குருக்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், பாரதிதாசன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழக டி.ஜி.பி., விஸ்வநாதன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். கும்பாபிேஷக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !