கோவிலுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றிட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்
குளித்தலை: குளித்தலை அருகே, கோவிலுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றிட வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா மேலப்பகுதி பஞ்., வீரணம்பட்டியில் விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் உள்ளன. கடந்த, 6ல், காளியம்மன், பகவதியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டு திருவிழா தொடங்கப்பட்டது. 7ல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் தொடங்க இருந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் நுழைய, குறிப்பிட்ட பிரிவினர் அனுமதி மறுத்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கடவூர் தாசில்தார் முனிராஜ், குளித்தலை டி.எஸ்.பி., ஸ்ரீதர் ஆகியோர் இரு பிரிவினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டபடாததால், அன்று இரவு கோவில் தற்காலிகமாக பூட்டப்பட்டது. நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி தலைமையில், ஏ.டி.எஸ்.பி.,மோகன், டி.எஸ்.பி.,ஸ்ரீதர், கடவூர் தாசில்தார் முனிராஜ் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் கோவிலுக்கு ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி சீல் வைத்தார்.