திருப்பாச்சேத்தியில் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டெடுத்திருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை ஆண்ட மன்னர்கள் வழிபட பல இடங்களில் சிவாலயங்களை நிர்மானித்தனர். காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் கோயில்கள் மறைந்த நிலையில் ஒரு சில இடங்களில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே உதயபெருமாள் என்பவரின் வயல்வெளியில் இரண்டரை அடி உயரமும் ஒன்றரை அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தியில் ஏராளமான சிவாலயங்கள் இருந்த நிலையில் தற்போது அதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருவதாக சமூக ஆர்வலர் சோனைமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்: கரிய முனீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கத்தை இப்பகுதி விவசாயிகள் வழிபட்டு வருகின்றனர். விவசாய காலங்களில் இந்த சிவலிங்கத்தை வழிபட்டு பூஜை செய்வது வழக்கம், என்றார்.