வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா
வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஜூன் 25ல் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இக்கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் நடக்காமல் தாமதமானது. இதனால் போதிய பராமரிப்பின்றி மீனாட்சி சுந்தரேஸ்வரர், விநாயகர், கன்னிமூல கணபதி, சுப்ரமணிய சுவாமி சன்னதிகள், கோயில் கோபுரங்கள் சிதலமடைந்து காணப்பட்டன. உள்ளூர் பிரமுகர்கள் திருப்பணி செய்ய ஆர்வத்துடன் இருந்தாலும் அறநிலையத்துறையின் நிர்வாக அனுமதி கிடைப்பதில் தாமதம் இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அனுமதி கிடைக்க 2021ல் பாலாலய பூஜையுடன் திருப்பணி துவங்கி, தற்போது நிறைவடைந்து ஜூன் 25ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான கும்பாபிஷேக முகூர்த்த கால் நடும் விழா இன்று நடந்தது. கோயிலில் திருக்கம்பத்திற்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் யாகசாலை அமையும் இடத்தில் நடப்பட்டது. கோயில் செயல் அலுவலர் முருகன், திருப்பணிக்குழுவினர், நன்கொடையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.