1000 ஆண்டுகள் பழமையான சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை விழா
மேட்டுப்பாளையம்,: சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில், ஆனி மாத கிருத்திகை பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறுமுகை பழத்தோட்டத்தில், பவானி ஆற்றின் கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதமும், 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா, கடந்த வாரமும் நடந்தது. இந்நிலையில் இன்று ஆனிமாத கிருத்திகையை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, பால் அபிஷேகம், கால சந்தி பூஜை நடந்தது. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகாண பஜனை குழுவினரின், வள்ளிக்கும்மி கிராமிய நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் கிருத்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.