வாலீஸ்வரர் கோவில் கொடி மரம் நட்டல் : எதிர்ப்பால் பரபரப்பு
சுந்தராபுரம்: குறிச்சியில் மிக பழமையான வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. தற்போது இக்கோவிலில் கட்டுமான பணி மேற்கொள்ளபட்டு வரும், 29ல் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதற்காக குறிப்பிட்ட தூரத்தில் ஆகம விதிப்படி கொடிமரம் கோவிலுக்கு வெளியே அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு கோவில் அருகே வசிக்கும் வெள்ளிங்கிரி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுக்கரை தாலுகா தாசில்தார் முருகேசன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை அமைதிக் குழு பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாட்களில் கோவில் நிர்வாகம், வெள்ளிங்கிரி குடும்பத்தார் பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கோவில் முன் கொடிமரம் நடப்பட்டது. தகவலறிந்த போலீஸ் உதவி கமிஷனர் கரிகால பாரி சங்கர் மேற்பார்வையில், சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.; கொடிமரத்தை அற்ற முடிவு செய்தனர். அங்கிருந்த பெண்கள், அனைத்து சமுக முக்கியஸ்தர்கள், வெள்ளிங்கிரியிடம் பேசுவதாகவும், கொடி மரத்தை அகற்ற வேண்டாம் எனவும் " எனவும் கோரினர். தொடர்ந்து வெள்ளிங்கிரியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. கோவிலின் முன் போடப்பட்டுள்ள தண்ணீர் குழாய்க்காக கட்டப்பட்டிருந்த திட்டை அகற்ற வெள்ளிங்கிரி கூறினார். இதையடுத்து திட்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜை செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அங்கு வந்த தாசில்தார் முருகேசன் அறிவுறுத்தலில், இரு தரப்பினரும் புகாரை வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.