கோவில்பட்டி தூய வளனார் தேவாலயத்தில் விவிலிய திருவிழா
கோவில்பட்டி: கோவில்பட்டி வளனார் தேவாலயத்தில் விவிலிய திருவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.கோவில்பட்டி தூய வளனார் தேவாலயத்தில் 2012ம் ஆண்டுக்கான விவிலிய திருவிழா கொண்டாட்டம் நடந்தது. இதற்கான நிறைவு விழா ஆலய வளாகத்தில் கோலாகலமாக நடந்தது. தூய வளனார் தேவாலய அன்பியங்கள் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுமார் ஒரு மாதகாலம் பல்வேறு விவிலிய போட்டிகள் நடந்தது. இதற்கான நிறைவு விழாவிற்கு வளனார் தேவாலய பங்குத்தந்தை அன்னாசாமி அடிகளார் தலைமை வகித்தார். உதவி பங்குத்தந்தை வில்சன் அடிகளார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி பங்குத்தந்தை மோயீசன், கேடிசி நகர் பங்குத்தந்தை அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விவிலிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். இதில் லூக்கா மண்டல அணியினர் நீயும் போய் அவ்வாறே செய் என்ற தலைப்பிலான சாம்பியன் பட்டத்தையும், மத்தியாஸ் மண்டல அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர். திருத்தொண்டர் வர்கீஸ் நன்றி கூறினார். விழாவில் லூக்கா மண்டல ஒருங்கிணைப்பாளர் மரியபால், பங்குப்பேரவை துணை தலைவர் சின்னத்துரை, விவிலிய திருவிழா ஒருங்கிணைப்பாளர் சலேத், ஆர்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி, துறவற சபை மரிய புஷ்பம், ரெஜினா, ஆசிரியர்கள் ஜேசுமிக்கேல், தங்கமேரி, ஆசிரியர்கள், பக்தசபைகள், அன்பிய மண்டலங்கள், கத்தோலிக்க இளையோர் இயக்கம், இளம்பெண்கள், பீடச்சிறுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.