சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் தேரோட்டம்: தேங்காய் வீசி நேர்த்திக்கடன்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக தினமும் சுவாமி புறப்பாடு நடந்தது. ஜூன் 29 ல் திருக்கல்யாணமும், ஜூன் 30 ல் கழுவன் திருவிழாவும் நடந்தது. 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 9:00 மணிக்கு பூரணை, புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் அய்யனார் திருத்தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரில் ஏறி சாமியை வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு சந்திவீரன் கூடத்திலிருந்து சிங்கம்புணரி நாட்டார்கள் ஊர்வலமாக வந்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். 4:15 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து சேவுகப்பெருமாள் அய்யனார் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் பவனி வந்த தேர் 4:45 மணிக்கு பாரம்பரிய முறைப்படி கழுவன் கழுவச்சி சிலைகள் மீது ஏறியது. மாலை 5:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அப்போது தயாராக இருந்த பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக தேங்காய்களை தேரடிப்படியில் சரமாரியாக வீசி எறிந்து உடைத்தனர். உடைந்த தேங்காய்களை பலர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து கொண்டு சேகரித்தனர். மாலை 6:00 மணிக்கு நேரடி பூஜை நடத்தப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம், நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்திருந்தனர். திருப்புத்தூர் டி.எஸ்.பி., ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 10 ம் திருவிழாவான இன்று பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.
பக்தர்கள் கூட்டத்துக்குள் தேங்காய் வீசிய இளைஞர்கள்; தேர் நிலையை அடைந்து நேர்த்திக்கடன் தேங்காய் உடைக்கும் போது இருபுறமும் இருந்து இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே பக்தர் கூட்டத்திற்குள் தேங்காய்களை வீசி எறிந்தனர். இதனால் சிலரின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் மீது தேங்காய் விழாதவாறு சுற்றி இருந்தவர்கள் பறந்து வந்த தேங்காய்களை பிடித்து நிறுத்தினர். வருங்காலங்களில் கூட்டத்திற்குள் தேங்காய் எறிபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.