ஆனைகட்டி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
பெ.நா.பாளையம்: ஆனைகட்டி அர்ஷ வித்யா குருகுல ஆசிரமத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், ஆனைகட்டியில் அர்ஷ வித்யா குருகுல ஆசிரமம் உள்ளது. இங்கு அமிர்த பிந்து உபநிஷத் என்ற தலைப்பில், ஒரு வார கால ஆன்மீக முகாம் கடந்த, 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், நேற்று குரு பூர்ணிமா விழாவை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், சுவாமி ஸ்ரீ தயானந்தா சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடர் சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்," குரு பூர்ணிமா நாளை வியாச பூர்ணிமா எனவும் அழைக்கலாம். வேத வியாசர், வேதங்களை தொகுத்தவர். பிரம்ம சூத்திரத்தை எழுதியவர். அவருடைய பிறந்த நாள், வேதவியாசர் பூர்ணிமா அதாவது, குரு பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது.
குரு என்பவர் நம்மை இருளிலிருந்து, வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர். இன்றைய நவீன யுகத்தில் ஒரு மனிதனுக்கு குரு தேவையா ! சமூக வலைதளங்களில் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் குரு இல்லாமலேயே தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது என்கின்றனர். குரு இல்லாமல் எந்த ஒரு கலையையும் திறம்பட கற்றுக் கொள்ள முடியாது. இசையாக இருந்தாலும், கண்டிப்பாக சிறந்த குரு தேவை. எடுத்துக்காட்டாக, பகவத் கீதையின் ஒவ்வொரு ஸ்லோகங்களின் உண்மையான பொருளை, ஒரு சிறந்த குருவின் வாயிலாக மட்டுமே சீடரால் தெரிந்து கொள்ள முடியும். சாஸ்திரங்களை குருவின் துணையோடு மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். குருவுக்கும், சீடருக்குமான உறவு புனிதமானது. குருவிடம் இருந்து பல்வேறு கலைகளை கற்றுக் கொள்ளும் சீடர், குருவுக்கு எப்போதும் நன்றி உணர்வு மிக்கவர்களாக இருக்க வேண்டும். குரு பூர்ணிமா நாளில் இதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்" என்றார். நிகழ்ச்சியில், தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஏற்கனவே ஆற்றிய உரை வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. ஆன்மீக முகாமை ஒட்டி, இம்மாதம், 8ம் தேதி வரை தினசரி காலை தியானம், உப நிஷத் வகுப்புகள், ஸ்லோகம் பாராயணம், கேள்வி பதில் சத்சங்கம் ஆகியன நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.