உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் 2வது நாளாக குவிந்த பக்தர்கள்: பஸ் இல்லாமல் சாலை மறியல்

திருவண்ணாமலையில் 2வது நாளாக குவிந்த பக்தர்கள்: பஸ் இல்லாமல் சாலை மறியல்

திருவண்ணாமலை: பவுளர்ணமி முடிந்து இரண்டவது நாளாக நேற்று காலையிலும் தொடர்ந்து  திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவில் வடக்கு கோபுரம் அருகே,  அமைக்கப்பட்ட பந்தலில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

சாலை மறியல்: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள், சொந்த ஊர் திரும்ப பஸ் இல்லாமல் மறியலில் ஈடுபட்டனர். பவுர்ணமி தோறும் மறியல் நடப்பது வாடிக்கையாகி விட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு பவுர்ணமி தோறும், பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து  கிரிவலம் செல்கின்றனர். இதில், ஆனி மாத பவுர்ணமி திதி நேற்று முன்தினம் மாலை, 7:45-க்கு தொடங்கி நேற்று மாலை, 5:49 மணி வரை  இருந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று மாலை வரை கிரிவலம் சென்றனர்.

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு பகுதியிலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. செங்கம் சாலை சந்தை மேடு அருகே,  தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து, நேற்று அதிகாலை, 2:00 மணி முதல், தர்மபுரி, சேலம், ஓசூர், போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாததால், ஆத்திரமடைந்த பக்தர்கள் நேற்று காலை, 7:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். இதேபோன்று, நகரை ஒட்டி அமைத்த, 9 தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டதால்,  நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தனர். இதனால் வேலுார் மற்றும் விழுப்புரம் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. 


இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: சங்கீதா, திருப்பத்துார்: மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் வருகிறேன். தற்போது கிரிவலம் சென்று அதிகாலை, 2:00 மணி முதல், திருப்பத்துார் செல்ல பஸ் எதுவும் வரவில்லை.


சுமதி, பெங்களூரு: பவுர்ணம் கிரிவலம் முடிந்து, அதிகாலை முதலே பஸ்சுக்காக காத்திருக்கிறேன். பெங்களூருக்கு இயக்கிய குறைந்தளவு பஸ்கள் போதுமானதாக இல்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு பஸ் வரும்போது, பக்தர்கள் முண்டியடித்து ஏறுகின்றனர். இதனால், பெண்கள், வயதானவர்கள், குழந்தை வைத்துள்ள பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறோம்.


வனஜா, பெங்களூரு: தற்காலிக பஸ் ஸ்டாண்டில், பாதுகாப்புக்கு போலீசார் கூட இல்லை. பெண்கள், வயதானவர்கள், குழந்தை வைத்துள்ளவர்கள் மிகவும் சிரமம் அடைகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !