அதி தீவிர மழையால் மூழ்கிய கோவில்: பக்தர்கள் தவிப்பு
புதுடில்லி, கேரளா, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
குல்லு மாவட்டத்தின் கசோல் பகுதியில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. மண்டி மாவட்டத்தில் பீஸ் நதியில் ஆக்ரோஷமாக வெள்ளம் பாய்ந்தோடியதால், ஆத் - பஞ்சரை இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. பீஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, அதன்கரையோர கிராமங்களில்தண்ணீர் புகுந்தது. இதையடுத்து, அந்த பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சவக்த்ரா கோவில் முழுதும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், பல்வேறு பகுதிகளில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நீர்நிலைகள் அருகே பொது மக்கள் செல்ல வேண்டாம், என, காங்கிரசைச் சேர்ந்த ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கேட்டுக் கொண்டுள்ளார். மழை தொடர்பான விபத்துகளில், புதுடில்லியில் ஒருவர்; ராஜஸ்தானில் நான்கு பேர்; உ.பி.,யில் இரண்டு பேர்; ஹிமாச்சல பிரதேசத்தில் மூன்று பேர், ஜம்மு - காஷ்மீரில் இரண்டு ராணுவ வீரர்கள் என, கடந்த இரு நாட்களில் மட்டும் மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களில், 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; ஏராளமான ரயில்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன. இதனால் பயணியர் அவதி அடைந்தனர். இதற்கிடையே, புதுடில்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில், அடுத்த இரு நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக பக்தர்கள் தவிப்பு: ஜம்மு - காஷ்மீரில் இமயமலை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்வது வழக்கம். இந்தாண்டுக்கான யாத்திரை சமீபத்தில் துவங்கிய நிலையில், அங்கு பெய்து வரும் பலத்த மழை, நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், யாத்திரையின் நடு வழியில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.