உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மணக்காட்டூர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா

நத்தம் மணக்காட்டூர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா

செந்துறை, நத்தம் செந்துறை அருகே மணக்காட்டூர் ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீபால விநாயகர் கோயில்களில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி கடந்த ஜூலை 8 திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர் கோவில் மலை, காவிரி, வைகை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு தீர்த்த கலசங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துரைப்பட்டு கோவில் முன் உள்ள யாகசாலையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து நிலத்தேவர் வழிபாடு, புனித மண் எடுத்தல்,முளைபாலிகை இடுதல், திருக்குடத்துக்குள் எழுந்தருள செய்தல், வேள்விச்சாலையில் நுழைதல் முதற்காலயாக வேள்விகள் துவக்கம், கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறையவி அளித்தல், பேரொளி பிரசாதம் வழங்குதல், ஸ்ரீருத்ர ஜெயம், வேத பாராயணம்,சுக்ரஹோரையில் கோபுர கலசங்கள் ஸ்தாபித்தல் உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் ஆகிய தெய்வங்களின் நான்காம் காலயாக வேள்விகள் துவக்கம், ஸ்ரீ ருத்ரஜெயம் வேத பாராயணம், கோபூஜை, சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை,வடுகபூஜை, தொட்டு துலக்குதல்,உயர் ஊட்டுதல் போன்ற பூஜைகள் நடந்தது. பூர்ணாகுதி, தீபாராதனையை தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்த புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் குடம் குடமாக கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா கொசமிட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும்,புனித தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் எம்.எல்.ஏ.ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன்,நத்தம் பேரூராட்சி சேர்மன் சேக் சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரெத்தினகுமார், பழனிச்சாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,நகரசெயலாளர் ராஜ்மோகன், குடகிப்பட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரிஅழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மணக்காட்டூர் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !