திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருஆடிப்பூர உத்ஸவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். ஆண்டாள் பிறந்த நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும். உத்ஸவ துவக்கத்தை முன்னிட்டு நேற்று மாலை பூர்வாங்க பூஜைகளுடன் சேனை முதல்வர் புறப்பாடு நடந்தன. இன்று காலை7:48 மணிக்கு சுவாமி கல்யாண மண்டபம் எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கும் கொடிமரத்திற்கும் அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று, காலை 11:00 மணிக்குகொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு ஆண்டாள், சுவாமி சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஜூலை22 ல் தேரோட்டம் நடைபெறும். மறுநாள் தீா்த்தவாரியுடன் தங்கப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி உத்ஸவம் நிறைவடையும்.