வைரவன்பட்டி வயிரவ சுவாமி கோயிலில் ஆடி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவ சுவாமி கோயிலில் ஆடி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலில் 11 நாட்கள் ஆடி பிரமோத்ஸவம் நடைபெறும். நேற்று பூர்வாங்க பூஜைகள் நடந்தன. இன்று விநாயகர் சன்னதி அருகே வயிரவர் சன்னதிக்கு முன்பாக அதிகாலை முதல் யாகசாலை பூஜைகள் நடந்து, வயிரவர் ஹோமம், நடந்து காலை 9:00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து கொடிப்படத்துடன் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வந்தார். பின்னர் கொடிமரத்தினருகே எழுந்தருளிய விநாயகர், வயிரவர் சுவாமிகளுக்கும், கொடிபடத்திற்கும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 10:45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அடுத்து கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்து சுவாமிக்கு காப்புக் கட்டப்படுகிறது. இரவில் சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். ஜூலை 21 மாலையில் தேரோட்டமும், ஜூலை22 ல் தீர்த்தவாரி, வெள்ளிரதத்தில் சுவாமி புறப்பாடும் இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும். பதினொரம் நாளில் பஞ்சமூர்த்திகளுக்கும், வயிரவசுவாமிக்கும் காலையில் மகா அபிஷேகம் மாலையில் திருக்கல்யாணம், இரவில் சுவாமிகள் திருவீதி உலாவும் நடைபெறுவதுடன் பிரமோத்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டினை ஏழக பெருந் திருவான வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்தனர்.