முருகனை வேண்டி.. ஆறுபடை வீடுகளுக்கு 1157 கி.மீ., பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
வடமதுரை: உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், அனைத்து உயிரினங்களும் சுபிட்சம் பெற வேண்டியும் முருகன் பெருமானின் ஆறுபடை வீடு கோயில்களுக்கு ஆன்மிக பாதயாத்திரை செல்லும் பக்தர் குழுவினர் இன்று அய்யலூர் வந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலையபட்டி சித்தர் பச்சைக்காவடி அய்யா தலைமையில் 30 பக்தர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஜூன் 7ல் பிள்ளையார்பட்டியில் துவங்கிய பாதயாத்திரையை திருத்தணியில் ஆக.13ல் முடிக்க திட்டமிட்டுள்ளனர். முருகன் பெருமானின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களை ஒருங்கிணைத்து நடக்கும் இந்த பாதயாத்திரை 67 நாட்களில், 1157 கி.மீ., துாரத்தை கடக்கிறது. இன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அய்யலூர் வந்த குழுவினரை எரியோடு திருஅருள் பேரவை தலைவர் என்.ராமகிருஷ்ணன், செயலாளர் எம்.பழனிச்சாமி, பொருளாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பக்தி இன்னிசை, இறைவழிபாடு நிகழ்ச்சி நடந்தது.