உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசைலம் கோயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு!

சிவசைலம் கோயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு!

ஆழ்வார்குறிச்சி: சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் புகுந்த பாம்பை பிடிக்காததால் பக்தர்கள் பீதியில் உள்ளனர். சிவசைலத்தில் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில் மேற்கு நோக்கி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது வெளியிடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட வருவது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன் கோயிலின் மடப்பள்ளிக்குள் ஒரு மரநாய் குட்டி புகுந்தது. பின்னர் வனத்துறையினர் பத்திரமாக அதனை பிடித்து காட்டிற்குள் கொண்டு விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 4.30 மணியளவில் மடப்பள்ளியில் பணியாற்றும் வெங்கட்ராமன் தண்ணீர் எடுப்பதற்காக வந்தபோது சைலப்பரை வணங்கிவிட்டு வெளியே அம்பாளை வணங்க வரும் பகுதியில் ஒரு அழகிய படிக்கட்டு உள்ளது. இந்த படிக்கட்டின் இருபுறங்களும் கல்லால் ஆன யானைகள் உருவம் உள்ளது. சிறு குழந்தைகள் கோயிலுக்கு வந்தால் இதன்மீறி ஏறி விடுவார்கள். அதன் அருகில் பாம்பை வெங்கட்ராமன் பார்த்துள்ளார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பாம்பை தேடினர். பாம்பு யானை சிலையின் உட்பகுதியில் அடிப்பகுதியில் உள்ள ஓட்டைக்குள் புகுந்துவிட்டது. சுமார் 2 மணிநேரம் ஆகியும் வனத்துறையினர் எவ்வளவோ போராடியும் கல் சிலையின் அடியில் சென்ற பாம்பு வெளியில் வரவே இல்லை. போராடி களைத்த வனத்துறையினரும் பாம்பை பிடிக்காமலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். தற்போது கோயிலின் உள்ளே தான் பாம்பு இருக்கிறது என்பது தெரிந்த பக்தர்கள் உள்ளே வரவே பயந்த நிலையில் உள்ளனர். மீண்டும் வனத்துறையினர் பாம்பை பிடிக்க வேண்டும். இல்லையென்றால் யானை கல் சிலைக்கு அருகேயுள்ள அந்த ஓட்டையை நிரந்தரமாக அடைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !