உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழைமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை; புதையலாக இருக்கலாம் என சந்தேகம்

பழைமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை; புதையலாக இருக்கலாம் என சந்தேகம்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை நெல்லியாலம் பகுதியை தலைமையிடமாக கொண்டு, ஆட்சி புரிந்தவர் ராணி போரம்மாள். இவரது கோட்டை இருந்த நெல்லியாளம் அருகே காக்கா தூக்கி அம்பலம் என்ற இடத்தில் சிவன் கோவில் கட்டி வழிபட்டு வந்தார். சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், மன்னர் ஆட்சி மறைந்த பின்னர் பூஜைகள் நிறுத்தப்பட்டு, கோவிலில் இருந்த பழமை வாய்ந்த உத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது. தொடர்ந்து மேல் கூரையும் சிதிலமடைந்த நிலையில், தற்போது நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆன்மீக அன்பர்கள் இணைந்து, கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மண்ணை எடுத்து வெளியே போட்டுள்ளது தெரியவந்தது. கோவில் கமிட்டியினர் பார்த்தபோது, மூலஸ்தானத்தில் சுமார் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு மண் மற்றும் பழமையான கற்கள் வெளியே எடுத்து போட்டு இருந்தது தெரிய வந்தது.

கோவில் கமிட்டி நிர்வாகி நவநீத ராஜா மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தங்க ஆபரணங்கள் மற்றும் சுதர்சன சக்கரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள், திப்பு சுல்தான் படையெடுப்பின் போது பாதுகாப்பாக வைப்பதற்காக மூலஸ்தானத்தில் குழிதோண்டி பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடும். அவை புதையலாக மாறி இருந்த நிலையில் அது குறித்து தகவல் தெரிந்த கும்பல் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இரவு நேரத்தில் குழி தோண்டி அவற்றை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவாலா போலீசார் மற்றும் பந்தலூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பழமை வாய்ந்த சிவன் கோவில் மூலஸ்தானத்தில் குழி தோண்டி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !