திருப்பரங்குன்றம் கோயில் இடத்தில் நந்தவனம் அமைக்க கோரிக்கை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோட்டைத்தெரு மலைமேல் செல்லும் படிக்கட்டுகள் வலதுபுறம் புதர் மண்டிக்கிடக்கும் இடத்தில் நந்தவனம் அமைக்க பக்தர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மலைப் படிக்கட்டுகள் ஆரம்பப் பகுதிகளில் இடதுபுறம் பழனி ஆண்டவர் கோயில் உள்ளது. எதிரே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இந்த இடத்தின் முன்பகுதியிலுள்ள பொது கழிப்பறை முற்றிலும் சேதம் அடைந்து பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியினர் கோயில் இடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பழனி ஆண்டவர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், மலை மேல் செல்பவர்களும் மூக்கை மூடி செல்லும் நிலை உள்ளது. கோயில் இடத்திலுள்ள செடி, கொடிகளை அகற்றி விட்டு நந்தவனம் அல்லது குறுங்காடு அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.