உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை அரசாளும் மீனாட்சி... சிலை வைப்பது என்னாச்சி...

மதுரை அரசாளும் மீனாட்சி... சிலை வைப்பது என்னாச்சி...

மதுரை - ”மதுரை புது நத்தம் ரோடு பறக்கும் பாலம் துாண்களில் பொருத்துவதற்காக தயாரித்த மாதிரி மீனாட்சி அம்மன் சிலை கவனிப்பாரற்று, கை உடைந்த நிலையில், துாசி படிந்து ரோட்டில் கிடப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது” என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் புது நத்தம் ரோடு ஐ.ஓ.சி., ரவுண்டானா முதல் ஊமச்சிக்குளம் செட்டிகுளம் வரை 7.3 கி.மீ.,க்கு கட்டப்பட்ட பறக்கும் பாலம், சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பாலத்தை தாங்கி நிற்பதற்காக 200க்கும் மேற்பட்ட கான்கிரீட் துாண்கள் கட்டப்பட்டுள்ளன. மதுரை - நத்தம் செல்லும் பகுதியில் துாண்களில் கள்ளழகர் சிலையும், நத்தம் - மதுரை வரும் பகுதி துாண்களில் மீனாட்சி அம்மன் சிலையும் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. துாண்களின் பக்கவாட்டில் மதுரையின் பாரம்பரிய பெருமையை பறைசாற்றும் ஓவியங்கள் வரையப்படும் என, பாலத்தின் மாதிரி படத்தை வெளியிட்ட போதே தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்தது. அதன்படி ஐ.ஓ.சி., ரவுண்டான பகுதியில் உள்ள 2வது துாணில் மாதிரி கள்ளழகர், மீனாட்சி அம்மன் சிலைகள் பொருத்தப்பட்டன. அதற்கு அடுத்துள்ள துாணின் கீழே வேறு மாதிரி மீனாட்சி அம்மன் சிலை ஒரு கை உடைந்த நிலையில் பல மாதங்களாக துாசி படிந்து கிடக்கிறது. பால பணிகள் முழுவதுமாக முடிந்த நிலையில் சிலைகளை வைக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. சிலைகளுக்காக பால துாண்களில் 4 புறமும் பொருத்தப்பட்ட ‛போகஸ் லைட்’டுகள் வீணாக எரிந்து கொண்டிருக்கின்றன மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனின் சிலை சேதமடைந்து ரோட்டில் கிடப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது. ஆந்திராவின் திருப்பதி, ம.பி.,யின் உஜ்ஜயினி உட்பட பல மாநிலங்களில் பாலத்தின் துாண்களில் சுவாமி சிலைகள் அழகுற பொருத்தப்பட்டுள்ளன. நமது கோயில் நகரமான மதுரையின் பறக்கும் பாலத்திலும் துாண்களில் திட்டமிட்டபடி பாரம்பரிய மிக்க கலைவிழாக்கள், சுவாமி சிலைகளை பொருத்த வேண்டும். சேதமடைந்த மீனாட்சி சிலையை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !