நடப்பு பசலி ஆண்டில் ரூ 41 கோடிக்கு பழநி கோவில் பஞ்சாமிர்தம் விற்பனை
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் நடப்பு பசலி ஆண்டில் ரூ.41 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வாழைப்பழம், நாட்டுசக்கரை, பேரிச்சம்பழம், ஏலக்காய், தேன், கற்கண்டு, நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும், பஞ்சாமிர்தம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழநி கோயில் பஞ்சாமிர்தம் புவிசார் குறியீடு பெற்றது. ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை இடைப்பட்ட கால அளவு பசலிக்காலமாக கருதப்படுகிறது. கடந்த 1434 வது பசலி ஆண்டில் ரூ. 36 கோடியே 14 லட்சத்து 31 ஆயிரத்து 585 க்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு பசலி ஆண்டு 1435 ஆனது 2025,ஜூலை. 1., முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ரூ.41 கோடியே ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 245க்கு, ஒரு கோடியே 42 லட்சத்து 80 ஆயிரத்து 81 டப்பாக்கள் விற்க்கப்பட்டுள்ளன. கடந்த பசலி ஆண்டுகளை விட நடப்பு பசலி ஆண்டு நிறைவடைவதற்கு முன்பே அதிக பஞ்சாமிர்தங்கள் விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. பழநி, கோயில் பஞ்சாமிர்த ஸ்டால்களில் பஞ்சாமிர்தம் 500 கிராம் சீல்டு டின் ரூ.45, பெட் ஜார் ரூ.40, 200 கிராம் பெட் ஜார் ரூ.20 க்கு விற்கப்படுகிறது. மேலும் கடந்த கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பழநி கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று உற்பத்தி விலைக்கு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.