இறைவன் திருமேனி சிலைகள் 48 நாட்கள் தண்ணீரில் வைக்கும் நிகழ்வு
துடியலூர்: துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையத்தில் இறைவன் திருமேனி சிலைகள் தண்ணீரில் வைக்கும் நிகழ்வு நடந்தது.
கோவை மாவட்டம், குருடி மலை அடிவாரம், குருடம்பாளையம் கிராமம், கதிர் நாயக்கன்பாளையம் ஆர்.எல்.ஜி., குடியிருப்பு பகுதியில் உள்ள லட்சுமி நகர் பேஸ், 3ல், சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம், செப்., 17ல் நடக்கிறது. திருக்கோவிலில் நிறுவப்படும் திருமேனி சிலைகள், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியிலிருந்து சிவனடியார்கள் மற்றும் இறை அன்பர்களின் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு, வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. இவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பூஜைகள் செய்து, மேளதாளங்களுடன் தொப்பம்பட்டி பிரிவு, சர்வோதயா காலனி, ஜங்கம்மநாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி வழியாக கதிர் நாயக்கன்பாளையம் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், குரு சக்தி கார்டன் உள்ளிட்ட குடியிருப்புகளின் வழியாக கிரீன் பீல்ட் குடியிருப்பில் உள்ள ஞான விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யப்பட்டு, திருமேனி சிலைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி, பக்தர்களுடன் லட்சுமி நகர் பேஸ், 3 ல் உள்ள சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இங்கு, 48 நாட்கள் இறைவன் திருமேனி சிலைகள் நீரில் வைக்கும் நிகழ்வு நடந்தது. விழாவை ஒட்டி கோவில் வளாகத்தில் தலவிருட்சமான வில்வம், வன்னி மரக்கன்றுகள் நடப்பட்டன. திரளான இறையன்பர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.