உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தில் விரிசல்: ரூ.67 லட்சத்தில் மராமத்து பணி செய்ய ஏற்பாடு

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தில் விரிசல்: ரூ.67 லட்சத்தில் மராமத்து பணி செய்ய ஏற்பாடு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், 67 லட்சம் ரூபாய் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட உள்ளது.

பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திகழ்கிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும், தினமும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ரெங்கா ரெங்கா கோபுரம், வெள்ளை கோபுரம் என நான்கு திசைகளிலும் நுழைவு வாயில்களுடன் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில், கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரத்தை அடுத்து, ஏழு நிலைகளுடன் தாமோதர கிருஷ்ணன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தின் முதல் இரண்டு நிலைகளில் விரிசல் ஏற்பட்டு, காரை பெயர்ந்துள்ளது. இரண்டாவது நிலையில் விரிசல்களுடன், வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள  மரத்துாண்களும் சிதிலமடைந்துள்ளது. கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் அருகிலேயே கிழக்கு ரங்கா மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராஜன் நடுநிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் வழியாக செல்லும் மாணவ, மாணவியரும், பொதுமக்களும் அச்சத்துடன் செல்வதாக புகார் எழுந்தது. மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கிழக்கு வாசல் கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணை ஆணையர் தகவல்: கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டவுடன், நன்கொடையாளர்களிடம் வசூல் செய்து, மராமத்து பணி துவங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான அவகாசம் இல்லாததால், அறநிலையத்துறை நிதியில் இருந்து, 67 லட்சம் ரூபாய் செலவில், மராமத்து பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்படும், என்று ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !