அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார் குரு பூஜை பெருவிழா
அவிநாசி: சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் குரு பூஜை பெருவிழா நடைபெற்றது.
ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் வரும் நாளை குருபூஜை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவிநாசி பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் 90 வது குருபூஜை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை மற்றும் சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராண வரலாற்றை முறைப்படி பண்ணொன்ற முற்றும் ஓதுதல் முறையில் திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஓதுவ மூர்த்திகள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர். முன்னதாக செல்வ விநாயகர், பாதிரி மரத்தம்மன், சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், சண்டிகேஸ்வரர், நால்வர் பெருமக்கள் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுடன் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் நான்கு ரத வீதியிலும் திருவீதி உலா வந்து அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலை 7 மணி ஓதுவா மூர்த்திகள் உடன் பாராயணம் செய்தனர். 90 வது குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு அர்த்த ஜாம பூஜை அடியார்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் செய்திருந்தார்.