உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விக்ரகங்கள் பவனி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நவராத்திரி விக்ரகங்கள் பவனி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

மார்த்தாண்டம்: பத்மனாபபுரத்தில் இருந்து வரும் 12ம் தேதி திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும் நவராத்திரி பூஜை விக்ரகங்களுக்கான வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் மன்னர்கள் பத்மனாபபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தபோது வள்ளியூர் மன்னரிடம் இருந்து அன்பளிப்பாக கிடைத்த சரஸ்வதி அம்மன் விக்ரகம் பத்மனாபபுரம் தேவாரகெட்டு ஆலயத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அரண்மனையில் நவராத்திரி மண்டபம் கட்டி சரஸ்வதி அம்மன் விக்ரகத்துடன் நவராத்திரி பூஜை நடந்து வந்தது. நாளடைவில் பத்மனாபபுரத்தில் இருந்து தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பிறகு நவராத்திரி பூஜையும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் சரஸ்வதி அம்மன் விக்ரகம் திருவனந்தபுரம் நவராத்திரி பூஜைக்காக யானை மேல் பவனியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.வேளிமலை முருகனும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையும் அம்மனுடன் செல்கின்றனர். இந்த ஆண்டு வரும் 12ம் தேதி சுவாமி விக்ரகங்கள் பவனியாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகிறது. சுவாமி விக்ரகங்களுக்கு வழிநெடுக சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி ஐயப்ப சேவா சங்க கூட்டம் பொதுச்செயலாளர் அழகப்பன் தலைமையில் குழித்துறையில் நடந்தது. சேதுகுமார் வரவேற்றார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுவாமி விக்ரகங்களுக்கு சுவாமியார்மடம் சென்று வழக்கம்போல் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சதாசிவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !