கிரக தோஷம் நீக்கும் கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருவையாறு அருகில் உள்ள கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவிலில் ஆடி 3ம் வெள்ளி கிழமை சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகில் உள்ள கண்டியூரில் பிரசித்தி பெற்ற பிரம்ம சிரகண்டீஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஐந்து முகம் கொண்ட பிரம்மா ஆணவத்தால் கொண்டு இறுமாப்புடன் இருந்தால் இத்தலத்தில் சிவப்பெருமான் பிரம்மாவின் ஒரு தலையை கொய்து பிரம்மாவை நான்முகனாக்கினான்.பிரம்மா தனது தவற்றை உணர்ந்து சிவனை நோக்கி தவம் இருந்து சாபவிமோசனம் பெற்றார். இத்தலத்தில் பிரம்மா மனைவி சரஸ்வதி தேவியுடன் காட்சி தருகிறார்.இத்தலத்தில் பக்தர்கள் தங்களது ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் நீங்குகிறது என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று 04/08/2023 ஆடி மூன்றாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு இஙகுள்ள இறைவி மங்களாம்பிகை மற்றும் பிரம்மா சரஸ்வதி மற்றும் துர்க்கை அம்மன் மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இக்கோவிலுள்ள அனைத்து அம்மன்களும் ஆடி 3ம் வெள்ளி கிழமை சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறுவது இத்தலத்தின் சிறப்பாகும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார்கள். இந்த வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை செயல் அலுவலர் பிருந்தாதேவி மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் செய்து இருந்தார்கள்.