உலக புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயிலில் மின்விசிறி, குடிநீர் இன்றி பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு மின்விசிறி, குடிநீர் வசதி இன்றி பெரிதும் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டணம் மற்றும் பொது தரிசன வரிசையில் சுவாமி, அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்த இரு வழியில் செல்லும் பக்தர்கள் கோயில் கிழக்கு வாசலில் இருந்து மூன்று பிரகாரத்தை கடந்து சுவாமி, அம்மன் சன்னதிக்கு செல்கின்றனர். பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க கோயில் நிர்வாகம் "ஜிக்ஜாக்" முறையில் தடுப்பு வேலி அமைத்து உள்ளதால், கிட்டத்தட்ட 1 கி.மீ., தூரம் பக்தர்கள் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. இந்த வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு நுழைவு வாசல் முதல் 3 மற்றும் 2 பிரகாரம் வரை எந்த இடத்திலும் மின்விசிறி, குடிநீர் வசதி எதும் இல்லை. இதனால் மணிக்கணக்கில் காத்திருக்கும் வயது மூத்த பக்தர்கள்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். மேலும் பக்தர்களுக்கு திடீரென உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சனையால், அங்கிருந்து வெளியேற அவசர வழியும் இல்லாமல், பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் பக்தர்களுக்கு விபரீதமும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தரிசன வரிசையில் மின்விசிறி, குடிநீர் வசதி, அவசர வழியை ஏற்படுத்திட ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும்.